கொழும்பு, ஏப்.26: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கொழும்பு நகரைச் சேர்ந்த பிரபல மசாலா கம்பெனியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது இரு மகன்களும் மனித குண்டுகளாக மாறி சாங்கிரிலா ஓட்டலில் குண்டுகளை வெடிக்கச்செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் அடைக்கலம் கொடுத்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் வெடிகுண்டுகள் வெடித் ததில் 359 பேர் உயிரிழந்தனர்.  இந்த உயிரிழப்பு குறித்து நேற்று இலங்கை சுகாதார அமைச்ககம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், உடல் பாகங்கள் சிதறி கிடந்ததால் காயம் அடைந்தவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்ததால் உயிரிழப்பு 359 பேர் என கணக்கிடப்பட்டது. ஆனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 253 தான் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் துப்பு துலக்கு வதற்காக இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு, அமெரிக்காவின் எப்பிஐ மற்றும் சர்வதேச போலீஸ் குழு உள்ளிட்ட 6 நாடுகளின் புலனாய்வு குழுவினர் கொழும்பில் முகாமிட்டு உள்ளனர்.

மேலும் சாங்கிலால் ஓட்டலில் இல்காம் அகமது மற்றும் அவரது சகோதரர் இஸ்மாத் அகமது இப்ராகிம் ஆகிய இருவரும் மனித குண்டு களாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இருவரும் கொழும்பில் செயல்பட்டு வரும் பிரபல மசாலா கம்பெனியின் உரிமையாளர் முகமது யூசுப் இப்ராஹிமின் மகன்கள் ஆவர்.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் நிதியுதவி செய்து தொடர்பாக மசாலா கம்பெனி அதிபர் முகமது இப்ராஹிம் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரையும் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவரது மகன்களில் ஒருவரான இல்காம் அகமதுவை ஏற்கனவே போலீசார் கொழும்பு கிராண்ட் ஓட்டலில் குண்டுவைத்தது தொடர்பாக கைது செய்து பின்னர் விடுவித்துவிட்டனர்.