விழுப்புரம், ஏப்.26: ஓடும் ரெயிலில் மயக்க பொடி தூவி ரெயில்வே அதிகாரி மனைவியிடம் ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பணகுடி கிராமத்தை சேர்ந்தவர் அகமது அலிகான் (வயது 52). இவர் சென்னை பெரம்பூரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து ரெயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருடைய உறவினர் வீட்டு விழாவுக்கு அகமதுஅலிகான் தனது மனைவி சையத்அலி பாத்திமா (வயது45), மகன் ஷபானி (வயது23), மகள் சச்சினா (வயது20) ஆகியோருடன் சென்றார்.

விழா முடிந்ததும் 4 பேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் சென்னை வந்தனர். நேற்று அதிகாலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் சையத்அலி பாத்திமா கண்விழித்து எழுந்து பார்த்தார். அப்போது தான் வைத்திருந்த கைப்பையை காணாதது கண்டு திடுக்கிட்டார். உடனே தேடி பார்த்தபோது அதே பெட்டியில் உள்ள கழிவறையில் கைப்பை கிடந்தது.

உடனே அந்த கைப்பையை எடுத்து பார்த்தபோது அதில் செல்போன் மட்டும் இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள 23 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதில் அவர் கூறும்போது, மதுரையை ரெயில் கடந்ததும் நாங்கள் 4 பேரும் தூங்கி விட்டோம். அதன் பிறகு விழுப்புரம் அருகே ரெயில் வரும்போது கண்விழித்து பார்த்தபோது கைப்பையில் இருந்த நகை, பணத்தை காணவில்லை. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது, யார் என்றே தெரியவில்லை. நாங்கள் தூங்கி எழுந்தபோது சற்று மயக்கமான நிலையில் இருந்தோம் என்றனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.