மோடி திரைப்படத்துக்கு தடை நீக்க மறுப்பு

இந்தியா

புதுடெல்லி, ஏப்.26: ‘பி எம் நரேந்திர மோடி’ திரைப் படத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.
மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.  இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.