கொழும்பு, ஏப்.27:  இலங்கையில் வெடிகுண்டுகள் தயாரித்த ஆலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது அங்கு பதுங்கியிருந்தவர்கள் போலீசாரை நோக்கி சுட்டனர். இந்த இடத்தில் 15 சடலங்கள் மீட்கப்பட்டன. அவற்றில் 6 பேர் குழந்தைகள். 3 பேர் மனித குண்டு தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.
கொழும்பில் கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்ததில் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இதையடுத்து இந்த இயக்கத்தை சேர்ந்தவர்களையும், இவர்களுடன் தொடர்புடையவர்களையும் இலங்கை ராணுவமும் போலீசும் இணைந்து கைது செய்து வருகிறது.
இலங்கையின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள கல்முனை என்ற இடத்தில் ஒரு ஆலையில் வெடிகுண்டுகள் தயாரித்ததாகவும், இங்கு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த ஆலையில் நேற்று மாலை பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கியிருந்தவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சமயத்தில் 3 வெடிகுண்டுகள் வெடித்தன.

சண்டை ஓய்ந்ததும் இந்த இடத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 6 பேர் ஆண்கள், 6 பேர் குழந்தைகள், மற்றவர்கள் பெண்கள். மனித குண்டு தீவிரவாதிகள் 3 பேரும் இதில் உயிரிழந்து இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத்துடன் துப்பாக்கி சண்டை நடத்தியவர்கள் தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சமந்துறை என்ற இடத்தில் ராணுவத்தினர் வீடு வீடாக சோதனை நடத்தியதில் ஐஎஸ் இயக்கத்தின் கொடிகள் மற்றும் உறுதி மொழி ஏற்கும் வாசகங்கள் அடங்கிய கையேடுகள், சீருடைகள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.

மட்டக்களப்பில் குண்டுவெடித்த தேவாலயத்திற்கு 40 கி.மீ சுற்றுவட்டார பரப்பளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிபர் சிறிசேனா கூறுகையில், நாடுதழுவிய அளவில் வீடு வீடாக சோதனை நடத்தி தீவிரவாதிகளை கைது செய்வோம் என்று இலங்கையில் நிரந்தரமாக வசிப்பவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஐஎஸ் இயக்கத்துடன் 140 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 70 பேர் மட்டுமே இதுவரை பிடிப்பட்டு இருப்பதாகவும் சிறிசேனா மேலும் கூறியுள்ளார். இதனிடையே கொழும்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வாராந்திர செய்தி கடிதம் என்ற பெயரில் நேற்று வெளியிட்ட தகவலில் கொழும்பில் கிறிஸ்தவர்கள் மற்றும் கூட்டு நாடுகளின் குடிமக்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் அமாக் என்ற வலைதளமும், ஞாயிற்றுகிழமை நடந்த தாக்குதலுக்கு தங்கள் இயக்கமே பொறுப்பு என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.