சென்னை, ஏப்.27: தோனி இல்லையேல், தோல்வி நிச்சயம் என்பதற்கு நேற்றைய போட்டி மிகச்சிறந்த உதாரணமாகிவிட்டது என்கின்றனர், சிஎஸ்கே ரசிகர்கள். காய்ச்சல் காரணமாக நேற்றைய போட்டியில் தோனி பங்கேற்காததால், சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்னை அணி களமிறங்கியது. இவரின், முன்யோசனை இல்லாத முடிவால் டாஸ் ஜெயித்தும் பயனில்லாமல் போனதாக சிஎஸ்கே வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சிஎஸ்கே 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், நிகர-ரன்ரேட் மைனஸில் இருப்பதால், எதிர்வரும் இரு ஆட்டங்களும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இக்காட்டான நிலைக்கு ஏற்றாற்போல அணியை கட்டமைக்கவும், ரன் தேவைப்படும் வேளைகளில் அதிரடி காட்டவும் தோனி இல்லாதது, சிஎஸ்கே-யின் கையறுப்பட்ட நிலையையே மீண்டும் உறுதிசெய்துள்ளது.

எதிலும் ஃபர்ஸ்ட்
கடந்த 12 போட்டிகளில் பவர்-ப்ளேயில் (முதல் 6 ஓவர்களில்) அதிகமான விக்கெட்டுகளை இழந்து, மோசமாக விளையாடும் அணியில் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. அதன்படி, நடப்பு சீசனின் பவர்-ப்ளேயில் மட்டும் 24 விக்கெட்டுகளை இழந்து, சராசரியாக ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது, சிஎஸ்கே.