சென்னை, ஏப்.27: சென்னையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பொய் தகவல் தெரிவித்த நபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் இவ்வாறு கூறியதாக அவர் போலீசில் கூறி உள்ளார்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ‘இலங்கையில் குண்டுகள் வைத்தது நான் தான் என்றும்,
சென்னையிலும் மேட்டுக்குப்பத்தில் குண்டு வைத்திருக்கிறேன். முடிந்தால் என்னை பிடியுங்கள்’ என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து செல்போன் நம்பரை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் அந்த அழைப்பு ஆழ்வார்திருநகரில் இருந்து வந்ததாக தெரிய வந்தது.

இதையடுத்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்ற போது 10 ஆண்டுகளுக்கு முன் அவர் அங்கு வசித்ததாகவும், இப்போது அங்கு இல்லை என்றும் தெரிய வந்தது. ஆனால் செல்போன் டவர் அவர் அந்த பகுதியிலேயே இருப்பதாக காட்டியது.

இதையடுத்து போலீசார் மீண்டும் துப்புதுலக்க ஆரம்பித்தனர். இதில் கோயம்பேடு பகுதியில் வள்ளியம்மை நகரில் அவரது வீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று விசாரித்த போது மர்ம நபரின் பெயர் மைக்கேல் டி ரேடி (வயது43) என்று தெரிய வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அலுமினியத்திற்கு பாலீஷ் போடும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த இவர் மனைவியிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.

பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பொய் தகவலை கூறி இருக்கிறார். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளை தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், குண்டுகளை நான்தான் வைத்தேன் என்று போலீசிடம் கூறி உள்ளார்.எதற்காக இப்படி கூறினாய் என்று போலீசார் கேட்ட போது, என் மனைவியுடன் ஏற்பட்ட கோபத்தால் அவளை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி கூறியதாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து மேலும்
விசாரணை நடத்தி வருகிறார்கள்.