சென்னை, ஏப்.27: சிவகார்த்திகேயன் நடித்து அடுத்த மாதம் 17-ந் தேதி
ரிலீசாக உள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் நடிப்பில் வெளி வந்த சீமராஜா படத்தில் ஏற்பட்ட ரூ.40 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட வினியோகஸ்தர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ரெமோ படம் தயாரிக்கப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் முடிவு செய்த பட்ஜெட்டைத் தாண்டி எடுக்கப்பட்டது. படம் வெளியாகி வசூலும் சராசரியாக கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். அதுவும் பட்ஜெட்டைத் தாண்டி உருவானது.

எதிர்பார்த்த அளவுக்கு வேலைக்காரன் படமும் வசூலை குவிக்கவில்லை. அதன் பின்னர் மூன்றாவது முறையாக சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். இந்த படத்தின் செலவு கிராபிக்ஸ் பணி, நட்சத்திரப் பட்டாளத்தின் சம்பளம், ஷûட்டிங் செலவு என எக்கச்சக்கமாக எகிறி தயாரிப்பாளருக்கு கையை கடிக்கும் அளவுக்கு வந்தது. தொடர் நஷ்டத்தால் அவர்கள் நினைத்திருந்த 4-வது படத்தை தள்ளிவைத்து விட்டு வெளி கம்பெனியில் சிவகார்த்திகேயன் நடித்தார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே 17-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமராஜா படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு ரூ.40 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடுகட்டித் தருவதாக சிவகார்த்திகேயன் உத்தரவாதம் அளித்துள்ளதால் இந்த படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.10 கோடி சம்பளத்தை தங்களுக்கு தருமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளனர்.

மேலும் படம் வெளியாவதற்கு முன்பாக எங்களுக்கு சேர வேண்டிய தொகை முழுவதையும் கொடுத்தால் மட்டுமே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட அனுமதிப்போம் என வினியோகஸ்தர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.