செந்தில்பாலாஜிக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை

சென்னை, ஏப்.27:  அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாதென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாதென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ஏ.பி. கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்தபோது, பணப் பட்டுவாடா காரணமாக, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின், 2016 நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.

செந்தில்பாலாஜியின் ஊழல் நடவடிக்கைகளால் தான் கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதால், இம்முறை அவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது. அவரை போட்டியிட அனுமதித்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்சானது, 2016ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ததை மறைத்து இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது .
மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதிகள், 15 நாட்களில் இந்த தொகையை சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.