சென்னை,ஏப்.28:4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர்.

முதல்வரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், சூலூர் எம்எல்ஏ கனகராஜ் ஆகியோர் காலமானதால் 3 தொகுதிகள் காலியானது. வழக்கு ஒன்றில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை பெற்றதால் ஒசூர் தொகுதி காலியானது.

ஒட்டுமொத்தமாக 22 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக இருந்த காரணத்தால், இதில் 18 தொகுதிகளில் கடந்த 18-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி இந்த 4 தொகுதிகளில் வேட்புமனுதாக்கல் தொடங்கிய நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்துவிட்டனர். ஆளும் அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இதுவரை வேட்புமனுதாக்கல் செய்யவில்லை, வேட்புமனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், நாளை அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை காலை வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர்.

நேற்றும், இன்றும் வேட்புமனுதாக்கல் பெறப்பட்டாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தநிலையில், நாளை வேட்புமனுதாக்கல் கடைசி நாள் என்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிற கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர்.