சென்னை, ஏப்.28:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற் படுத்தியிருக்கிறது.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் ஒரு மர்மத் தொலைபேசி வந்தது. அதில் பேசியவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொலை செய்வேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனே போலீசார் உஷார் அடைந்து அந்தத் தொலைபேசி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்த போது, திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பகுதியில் குருசங்கர் என்பவரின் தொலைபேசி எண்ணிலிருந்து வந்ததாக தெரிய வந்தது.

உடனடியாக திண்டுக்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. குறிப்பிட்ட முகவரிக்கு சென்று போலீசார் தேடிய போது அந்த பெயரில் யாரும் இல்லை என்று தெரிய வந்தது.

இருப்பினும், மர்மத் தொலைபேசி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.