மதுரை, ஏப்.28: மதுரை மாவட்ட புதிய கலெக்டராக ச. நாகராஜன் இன்று பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில் திருப்பரங்குன்றம் தொகுதியில் கூடுதல் பறக்கும் படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்.

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது போதாது என்றும், மாவட்ட கலெக்டரையே மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இரவு 7 மணிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.
ஆனால், இந்த அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கலெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

இதை பதிவு செய்துகொள்கிறோம். அதே நேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை முன்னாள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

இதையடுத்து புதிய கலெக்டராக நியமிக்கப் பட்ட ச.நாகராஜன் இன்று மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை கூடுதல் இயக்குனராக பதவி வகித்தவர்.

பொறுப்பேற்ற உடன் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தற்போது 9 பறக்கும் படையினர் உள்ளனர். தேவைப் பட்டால் இது அதிகரிக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.