கொழும்பு, ஏப்.28: இலங்கையில் நேற்று நடைபெற்ற மனித குண்டு தாக்குதலில் 16 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கமே பொறுப்பேற்றுள்ளது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்முனை என்ற நகரில் நேற்று தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது ராணுவத்தை நோக்கி சுட்டதால் துப்பாக்கிச் சண்டை மூண்டது. ராணுவத்தை தடுக்க, 3 மனித குண்டுகள் வெடித்தன.

இதில் 6 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 6 ஆண்களும் தீவிரவாதிகள் என தெரிய வந்தது. 3 மனித குண்டுகளும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் இயக்கமே மீண்டும் பொறுப்பேற்று உள்ளது.

இதனிடையே ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தினர் தென்னிந்தியாவிலும், செயல்பட்டு வருவதாக இலங்கை ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தவ்ஹீத் இயக்கத்தின் தலைவர் சஹாரன் காசிம், சாஹிலால் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிட்டார். குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த இவர் தென்னிந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மனித குண்டுகளாக செயல்பட்ட 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களை இலங்கை அரசு இன்னும் வெளியிடப்படவில்லை.