சென்னை, ஏப்.29:தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அந்த அணியில் இடம் பெற்றுள்ள பாமக, பிஜேபி, தமாகா போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் தேமுதிகவும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற இருக்கிற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்ற வேண்டும்.

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.