சென்னை,ஏப்.29:திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இம்மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளிக்கும் வருகிற மே 19-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் இன்று நண்பகல் 12.15 மணிக்கு ஒரே நேரத்தில் மனுத்தாக் கல் செய்தனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, திருப்பரங் குன்றத்தில் எஸ்.முனியாண்டி ஆகியோர் இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்கள் முன்னதாக கட்சி தொண்டர்களுடன் அணிவகுத்து

சென்றார்கள். மக்கள் நீதி மைய வேட்பாளர்களும் இன்று 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன. வேட்பு மனுக்களை விலக்கிக்கொள்ள அடுத்த மாதம் 2-ந் தேதி கடைசி நாளாகும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.