மதுரை, ஏப்.29: ஆசனவாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவுப்பிரிவு போலீசார் பயணிகளை தீவிர சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்ரகீம் ரியாஸ் என்பவரிடம் சோதனையிட்டதில் அவர் ஆசனவாயில் களிமண் கலவையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் ஆகும்.

அதே விமானத்தில் இதே முறையில் 500 கிராம் தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் சின்னத்தொண்டியை சேர்ந்த பார்த்திபன் என்பவரும் அதிகாரியிடம் சிக்கினார்.பார்த்திபன் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சத்து 4 ஆயிரம் ஆகும். ஒரே நாளில் 2 பேரிடம் ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது ள்ளது.