சென்னை, ஏப்.29:சென்னை வியாசர்பாடி காந்திபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 30). இவர், உடுக்கை அடிக்கும் தொழில்
செய்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது 40). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 10 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துவருவதாக தெரிகிறது.இந்த நிலையில், நேற்றிரவு 10.50 மணியளவில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, வெங்கடேசனின் மனைவி குறித்து, குப்புசாமி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த குப்புசாமி கத்தியை எடுத்துவந்து, வெங்கடேசனை தாக்க முயன்றுள்ளார்.

தன்னை குத்தவந்த கத்தியை மடக்கி பிடித்து, திருப்பி குப்புசாமியை குத்தியுள்ளார், வெங்கடேசன். இதில், படுகாயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின்பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வெங்கடேசனை கைது செய்தனர்.