புதுடெல்லி, ஏப்.29:பிஜேபி எம்பி மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.

இதற்கு பிஜேபி தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக,உச்சநீதிமன்றத்தில் பிஜேபிஎம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

கடந்த 23-ம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தனது நிலைப்பாடு தொடர்பாக ராகுல் காந்தி இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.