புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடி  நிதி

TOP-1 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, ஏப்.30: பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.309 கோடி உட்பட நான்கு மாநிலங்களுக்கு ரூ.1086 கோடியை ஒதுக்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து அதிதீவிர புயலாக பானி என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இது வடக்கு மற்றும் வட மேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் திசை மாறி செல்ல வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் சூறாவளிப் புயலாக உருவெடுத்துள்ள பானி கரையைக் கடக்கும் போது கடுமையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளிப் புயல் காரணமாக, வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பானி புயல் வடக்கு நோக்கி நகரும் போது, தமிழகத்துக்கு அதிக பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

பானி புயல் கரையை கடக்கும் போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய கடலோர மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தேசியப் பேரிடர் மேலாண்மைக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நான்கு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது. இதன்படி நான்கு மாநிலங்களுக்கும் ரூ.1,086 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உள்ளது.

தமிழகத்துக்கு ரூ.309.375 கோடி, ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடி, ஒடிசாவுக்கு ரூ.340.875 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.235.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.