சென்னை, ஏப்.30: தோஹாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் அதிமுக சார்பில் வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அகியோர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகளப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4றூ400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் ஆகியோருக்கு அதிமுக சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் இதயமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பல்வேறு வகைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உதவிகளைச் செய்து, அவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்று தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வழிவகை செய்து தந்துள்ளார் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அந்த வகையில், இவ்விரு விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, அதிமுக சார்பில், தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்துவுக்கு 15 லட்சம் ரூபாயும்; வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள ஆரோக்கிய ராஜீவுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறோம்.