புதுச்சேரி, ஏப்.30: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அதிகாரம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அதிகாரிகளிடம் ஆவணங்களை அவர் கேட்க முடியாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அரசின் அன்றாட நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் வகையில் துணைநிலை ஆளுநர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், ’முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களில் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

மேலும், யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.