சென்னை, ஏப்.30:  மே தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் உழைப்பின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுக சார்பில் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துவதாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் கூறியுள்ளனார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது வருமாறு:- உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கணக்கில்லா வேலை நேரம், கொத்தடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர் பெருமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினமே மே தினம் ஆகும்.

தொழிலாளர் பெருமக்கள் சிந்திய ரத்தத்தாலும், வியர்வையாலும் தான் இன்றைய நவீன உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் உழைப்பு போற்றுதற்குரியதாகும்.

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான இந்த இனிய நாளில், தொழிலாளர்கள் நலமுடனும் வளமுடனும் மகிழ்வாக வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது வருமாறு:- உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்கள் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வகையில், உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் தொழிலாளர்களுக்கு உளமார்ந்த மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உழைப்பாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், மேன்மை மிக்க சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் நாள் மே தினமாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியும், உதவிகளையும் வழங்கினர்.

உரிமைகளை காத்து தொழிலாளர் வாழ்வு சிறக்க மீண்டும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.