சென்னை, ஏப்.30: ஓசூரில் இருந்து கோயம்பேடுக்கு வந்த அரசுப்பேருந்தில் கேட்பாரற்று மர்ம பை கிடந்துள்ளது. இதை பார்த்த, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் அந்த பையை எடுத்து, சி.எம்.பி.டி. போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவற்றை பிரித்து பார்த்த போது, அதனுள் டம்மி துப்பாக்கி மற்றும் கவரிங் நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அண்ணாநகரை சேர்ந்த வாசு (வயது 30) என்பவரின் பை தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தனது குழந்தைகள் விளையாடுவதற்காகவே இவற்றை வாங்கிச் சென்றதாக வாசு, போலீசில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வாசு மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.