சென்னை, ஏப்.30: சென்னை சென்ட்ரல்- விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.  சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றிய 8 பேர் பணியில் அக்கறை காட்டாததால் அவர்கள் மீது நிர்வாகம் கடந்த 26-ந் தேதி நடவடிக்கை எடுத்தது.

இவர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி கோயம்பேடு மெட்ரோ நிர்வாக அலுவலகத்தில் நேற்று பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிர்வாகம், டிப்ளமோ படித்த ஐடிஐ பொறியாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்குவதாகவும், பிற பணியாளர்களுக்கு மற்ற துறைகளை விட இருமடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் சம்பளம் வழங்கினால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது இருக்கும்.

எனவே பயணிகளின் ஆதரவுடன் மெட்ரோ ரெயில்களை நல்லமுறையில் இயக்க முடிவெடுத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பணியாளர்கள் நேற்றிரவும் கோயம்பேட்டில் உள்ள நிர்வாக அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்கள். இன்றும் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது.

பிரச்சனை குறித்து தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று முத்தரப்பு பேச்சு நடைபெற உள்ளது.  இந்நிலையில் சென்ட்ரல்- விமான நிலையம் இடையிலான போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் பிற இடங்களில் வழக்கமான போக்குவரத்து நடைபெறுவதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மீது கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.