ஐதராபாத், ஏப்.30: நேற்றைய போட்டியிலும் அதிரடி காட்டிய ஐதராபாத் வீரர் டேவிட் வார்னர், ஆட்டநாயகன் விருதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விடைப்பெற்றுள்ளார்.

ஐதராபாத்தின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர், உலகக் கோப்பை பயிற்சி முகாமை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

வழக்கம்போல் நேற்றைய போட்டியிலும் அதிரடி காட்டிய வார்னர், 56 பந்துகளில் 81 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். நடப்பு சீசனில் இவர், இதுவரை ஆடிய 12 போட்டிகளில் மொத்தம் 692 ரன்களுடன், அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், என்பது கவனிக்கத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு தடைவிதிக்கப்பட்டபோது மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். எனது குடும்பத்தினர் குறிப்பாக மனைவி மற்றும் மகள்கள் என்னை மீட்டெடுத்தார்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டது, என்னை திடப்படுத்திக்கொள்ள உதவியது.

இந்த ஆண்டு சீசனின் துவக்கத்தில் நான் இப்படி ஆடுவேன் என நினைத்து பார்க்கவில்லை. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முயற்சித்தேன். அதன் பலனாகவே இத்தனை ரன்களை என்னால் குவிக்க முடிந்தது.

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பங்களிப்பை நிச்சயம் தர முயற்சிப்பேன். வரும் போட்டிகளில் வெற்றி பெற ஐதராபாத் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துக்கொண்டு நெகிழ்ச்சியுடன் விடைப்பெற்றார், வார்னர்.