பெங்களூரு, ஏப்.30: அடுத்து சுற்றில் பங்குபெறும் நோக்கில் பெங்களூரு அணியுடன் ராஜஸ்தான் அணி இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மல்லுக்கட்டுகிறது.

ஐபிஎல் தொடரில் இன்னும் 8 லீக் போட்டிகளே எஞ்சியுள்ளன. பெங்களூரு அணியை பொறுத்தவரை அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.

எனவே எஞ்சிய போட்டிகளில் நெருக்கடி இல்லாமல் விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிப்போம் என்று அந்த அணியின் கேப்டன் விராட்கோலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். பெங்களூருவுக்கு இது சம்பிரதாய போட்டியாகவே கருதப்பட்டாலும், எதிரணியிடம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடிக்கொடுக்க முனைப்பு காட்டும்.

அதேசமயம், 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ராஜஸ்தான் அணி, தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய ஆட்டத்துடன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால், அவரிடம் இருந்து சிறந்த இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.