வேலூர், ஏப்.30: விஐடியில் இந்தாண்டு பிடெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

விஐடி வேலுர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் பி.டெக் (2019) பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு இம்மாதம் 10ந் தேதி முதல் 21ம் தேதி வரை துபாய், குவைதத், மஸ்கட் மற்றும் கத்தார் ஆகிய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 163 மையங்களில் கணிணி முறையில் நாள்தோறும் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இதில் 1லடசத்து 62 ஆயிரத்து நானுற்று அறுபத்து இரண்டு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், நுழைவுத் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சாய் சகிடிக்கா செருக்குரி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவர் குரஜாலா ஜோயல் மோசஸ் இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த துஸார் ஜெயின் மூன்றாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் டிஸ்னக் ஜிண்டால் நான்காமிடத்தையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஜி. பாலா ரத்னசாமி ஐந்தாமிடத்தையும், கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவர் தாமஸ் ஜேக்கப் ஆறாமிடத்தையும், மேற்குவங்காளம் மாநிலத்தை சேர்ந்த மாணவி யாசிக்கா பட்டோடிய ஏழாமிடத்தையும், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ராகவன் கோபாலன் எட்டாம் இடத்தையும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் மோகித் குமார் கோயல் ஒன்பதாம் இடத்தையும், உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர் சித்தார்த் கிரி பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

விஐடி நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் ரேங்க் அடிப்படையில் மே மாதம் 9-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

தகுதிபெற்ற மாணவ மாணவியர்கள் விஐடி வேலுர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.