12 அடி நீள தூரிகையால் ஓவியம் வரைந்த மாணவர்கள்

தமிழ்நாடு

விழுப்புரம்,ஏப்.30: உழைப்பாளர் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 12 அடி நீள தூரிகையால் ஓவியங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக மைதானத்தில் ராம்ஜி ஓவியப் பள்ளி, சென்னை கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 2-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் 27 பேர் கலந்துகொண்டனர்.

12 அடி நீள தூரிகையால் தரையில் விரித்திருந்த வெண்ணிறத் தாளில் உழைப்பாளர்கள் குறித்த ஓவியத்தை 30 நிமிடங்களில் வரைய வேண்டும் என்ற விதிகளுடன் பகல் 11.55 மணிக்கு போட்டி தொடங்கியது. தூரிகையால் அருகிலிருந்த வண்ணத்தைத் தொட்டு, உழைப்பாளர்களின் வெவ்வேறு உருவங்களை ஓவியமாக குறித்த நேரத்தில் மாணவ, மாணவிகள் அனைவரும் வரைந்து முடித்தனர். இதை சென்னை கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் த.குமரவேல் தலைமையிலானக் குழுவினர் கண்காணித்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர்.

ஓவியத்தில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு விருதுகளையும் வழங்கினர். மனித உரிமைகள் கழக மாநில துணைப் பொதுச் செயலர் ஆர்.கந்தன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவர்களைப் பாராட்டினர்.