திருத்தணி ஏப் 8: திருத்தணி அடுத்த பி.டி.புதூர் கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாய், மகன் இருவரையும் கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருத்தணி அடுத்த பிடி.புதூர் கிராமம், பாலாஜி நகரில் வசித்து வருபவர் வனப்பெருமாள் (வயது45). இவர் அருகில் உள்ள எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி விஜய் என்கிற வீரலட்சுமி ஊனமுற்றவர். இவர்களது மகன் போத்திராஜ் (வயது 10). நேற்றிரவு வனப்பெருமாள் இரவு பணிக்கு சென்று விட்டதால் வீரலட்சுமியும் மகன் போத்திராஜியும் வீட்டில் தூங்கியுள்ளனர்.

அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்தனர். இதைபார்த்து சத்தம் போட்ட தாய், மகன் இருவரையும் கொள்ளையர்கள் கத்தியால் குத்தியும், அயன்பாக்ஸ் வயரால் கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.பின்னர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இன்று காலையில் வேலைக்கு சென்றிருந்த வனப்பெருமாள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மனைவி, மகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அலறினார். அப்போது அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது தாய்- மகன் இருவரும் கொலை செய்யப்பட்டும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி.பொன்னி, திருத்தணி டி.எஸ்.பி. சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ராம்போ வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தபோது மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கொலையான தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதை பார்த்து தடுத்த தாய்- மகனை காட்டி கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொலை செய்து இருக்கலாம் என்றும் வீட்டிற்கு வருபவர்கள் தான் இந்த செயலை செய்திருக்கவேண்டும் என்றும்போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அந்தபகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடயங்களை வைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். 20சவரன் நகை மற்றும் பணத்துக்காக ஊனமுற்ற பெண்ணையும் அவரது 10 வயது மகனையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ள சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.