தூத்துக்குடி, மே 2:திருச்செந்தூர் கோயிலில் மயில் சிலை சேதமடைந்தது தொடர்பாக அறநிலையத்துறையைச்
சேர்ந்த 6 பேர் மீது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இதில் பழமையும் தொன்மையும் கொண்ட தேவ மயில் சிலை, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ந் தேதி சிசிடிவி இணைப்பை துண்டித்து விட்டு, அர்த்தசாம பூஜை முடிந்து கோவிலின் நடை சாத்திய பின்னர், இரவோடு இரவாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக ஏற்கனவே செய்து தயாராக வைக்கப்பட்டிருந்த புதிய மயில் சிலை ஒன்றை அங்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சிலை மாற்றம் குறித்து, ஆன்மீக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்தார். சிலை மாற்றப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து விட்ட பின்னரும், காவல்துறையில் புகார் அளிக்காமல் அதனை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த பழமையான மயில் சிலையை, 15 தினங்கள் கழித்து மீண்டும் சிசிடிவி இணைப்பை துண்டித்து யாருக்கும் தெரியாமல் கோவிலுக்குள் இரவோடு இரவாக கொண்டு வரப்பட்டு அங்கேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிலையை எடுத்து சென்றபோது மயிலின் தலை உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை மறைக்க சிலையில் மேல் வெள்ளை துணி போட்டு மூடி வைத்திருந்துள்ளனர். அண்மையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவிடம் திருச்செந்தூர் கோவிலின் இணை ஆணையர் பாரதி என்பவர், சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விரிவான புகாராக தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவத்தில், கோவிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மனாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜா, குமார், சுவாமிநாதன் ஆகிய 6 பேர் மீது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.