சென்னை, மே 2:சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது. இது தொடர்பாக கடையின் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

காணாமல் போன நகைகளை மீட்டுத்தருமாறு பாண்டிபஜார் போலீசில் கடை நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.ஜாபர்கான் பேட்டையில்
வசித்து வந்தவர் ரவிக்குமார் (வயது 32). இவர் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவில் பணியாற்றி வந்தார்.
கடையில் ரூ.2 கோடி மதிப்புள்ள 600 கிராம் நகைகள் மாயமானது குறித்து ரவிக்குமாரிடம் நிர்வாகம் கேட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 15-ந் தேதி ரவிக்குமார் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில், இன்று காலை நகைக்கடையின் மேலாளர் பாண்டி பஜார் போலீசார் புகார் தெரிவித்தார். அதில், காணாமல் போன ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் நகைகளை தற்கொலை செய்து கொண்ட ஊழியர் அவரது உறவினர் களிடம் கொடுத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நகைகளை மீட்டுத்தர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட ரவிக்குமார் திருமணமானவர். அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

காணாமல் போன நகைகள் எங்கே போனது என்பது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.இந்த சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.