நக்சலைட்டுகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்தியா

கட்சிரோலி, மே 2: மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பாதுகாப்பு அளித்து வந்த கமாண்டோ படையினரை கண்ணிவெடிவைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் இழிவானது என்றும் இதில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய மாநிலம், கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் இழிவான தாக்குதலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

துணிச்சல் நிறைந்த படையினருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகம் ஒரு நாளும் மறக்கப்படாது. துயரம் அடைந்துள்ள குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் இணைந்து இருக்கும். இத்தகைய வன்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், கட்சிரோலி சி–60 போலீஸ் கமாண்டோக்கள், நக்சலைட்டுகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர் என அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இணைந்து இருக்கும். போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கட்சிரோலி போலீஸ் சூப்பிரண்டுடன் தொடர்பில் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கட்சிரோலியில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதல் பற்றி அறிந்ததும் மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் நடந்த சம்பவம் பற்றி தேவேந்திர பட்னாவிஸ் சுருக்கமாக எடுத்துக் கூறினார்.
வீரமரணம் அடைந்த கமாண்டோக்கள் குடும்பங்களுக்கு ராஜ்நாத்சிங் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நக்சலைட்டுகளை ஒழித்துக்கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் மாநில அரசுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மராட்டியத்தில் கட்சிரோலியில் கமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.