புவனேஸ்வர், மே 3: ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் சந்திரபாலிக்கு இடையே பூரிக்கு அருகில் பானி புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான பானி புயல் தற்போது ஒடிசாவை நோக்கி நகர்ந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் பூரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் பலத்த மழை பெய்வதுடன் கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. இதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புயல் கரையை கடந்ததாக நினைத்துக்கொண்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் பொழுது மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

ஒடிசாவில் கரையை கடக்கும் பானி புயலானது மேற்கு வங்கத்தின் கங்கை சமவெளி பகுதியை அடைந்து தீவிர புயலாக மாறும். இதைத் தொடர்ந்து நாளை மாலை வங்கதேசத்தில் நுழைந்து படிப்படியாக வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.