புதுடெல்லி, மே 2: பி.எம். நரேந்திர மோடி படம் மே 24 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற பெயரில் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையம் பார்த்து முடிவு செய்யலாம் என அறிவுறுத்தியது.

இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து தடை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் அதற்கு அடுத்த நாள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.