சென்னை, மே 3: வட்டியில்லாத நகைக்கடன் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் இன்று 2-வது நாளாக சென்னை கமிஷனர் அலுவலத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இதேபோல், ஏலச்சீட்டு, பணமோசடியில் பாதிக்கப்பட்டவர்களும் திரண்டுவந்து மனு அளித்ததால் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
சென்னை, மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோயில் தெருவில் பியானி என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார். இவரது கடையில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் வட்டியில்லாமல் நகைக்கடன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது.

இதனை நம்பி, ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து, சவரனுக்கு ரூ.10,000 கடன் பெற்றுள்ளனர். இதனிடையே, சிறிது நாட்களாக கடை பூட்டியநிலையிலேயே இருந்துள்ளது.  இதனால், நகைகளை மீட்க முடியாமல் பதறிப்போனவர்கள், தங்களின் நகைகளை மீட்டுத்தரக்கோரியும், தலைமறைவானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்ககோரியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று மனு அளித்தனர்.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
இதேபோல், உள்ளகரம் பகுதியில் ஜான் பீட்டர் -ஜோஸ்லீன் தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் வரை வசூலித்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் பணத்தை மீட்டு தரக்கோரி கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.

இதனிடையே, ஓட்டேரி  சத்தியவாணிமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு, அயப்பாக்கத்தில் குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி, அப்பகுதிவாசியினரிடம், ஓட்டேரியை சேர்ந்த ராதிகா பண மோசடி செய்துள்ளார்.

ஒவ்வொருவரிடமும் ரூ.60,000-ல் இருந்து ரூ.1 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு ராதிகா தலைமறைவாகியுள்ளார். இவ்வாறு 2-3 வருடங்களாக கிட்டத்தட்ட 150 பேரை அவர் ஏமாற்றியுள்ளார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர், புகார் மனு அளிப்பதற்காக கமிஷனர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.  இது தொடர்பாக, தலைமை செயலக காலனியில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.