நெல்லை, மே 3: நெல்லை டவுன் பகுதியில் இன்று அதிகாலை ஆட்டோ டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- நெல்லை பழைய பேட்டை பகுதியில் வசிப்பவர் குட்டி என்ற சுடலை. இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார் இந்நிலையில்,நெல்லை டவுன் பார்வதி சேஷ மஹால் அருகே, நேற்றிரவு குட்டி தனது ஆட்டோவில் உறங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ஆட்டோ டிரைவர் குட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.

இதனால் படுகாயம் அடைந்த குட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த டவுன் போலீசார் குட்டியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த படுகொலை குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.