ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 51-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் 2 ஓவர்களில் 5 பவுண்டரி துரத்தியடித்த ரோகித் சர்மா அடுத்த 3 ஓவர்களில் தடுமாறினார். அவர் 24 ரன்களில் (18 பந்து) கேட்ச் ஆனார்.சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி மும்பையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் 162 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்ததால் சூப்பர் ஓவர் நடைபெற்றது. சூப்பர் ஓவர் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி வெறும் 8 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணி மூன்றே பந்துகளில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.