‘வணிக நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும்’

சென்னை

சென்னை, மே 3: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் விதிமுறை களுக்குட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகரட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் 01.01.2019 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழக அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளில் 1.01.2019 முதல் 2.05.2019 வரை 198 மெட்ரிக் டன் அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், அறிவுறுத்தலின்படி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, தலைமையில் நேற்று 2ம்தேதி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அறிவுறுத்து தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப் படுத்து பவர்கள் மீது சட்ட விதிகளின் படி தாக்கீது வழங்கி நடவடிக்கைகள் தொடரவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும் அனைத்து வணிக நிறுவனங்கள், சிறிய அளவிலான காய்கறி, பூக்கள் விற்பனையாளர்கள் மற்றும் இறைச்சி, மீன் வியாபார கடைகளில் தொடர்ந்து பயன்படுத்தும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அவ்வகையான பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யவும், வணிக நிறுவனங்களின் வணிக உரிமத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு ரத்து செய்ய மேல் நடவடிக்கை தொடரவும், மண்டல அலுவலர் கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வடக்கு வட்டார துணை ஆணையாளர் எஸ்.திவ்யதர்ஷினி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், தலைமைப் பொறியாளர் என்.மகேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் என்.ஏ.செந்தில் நாதன், மண்டல அலுவலர்கள், கூடுதல் மாநகர நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.