சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் மட்டுமின்றி கோவில்களுக்கு சொந்தமான திருக்குளங்களும் வறண்டு காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மழை வேண்டி கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தேசித்துள்ளது.

அதன்படி, ஸ்ரீவிகாரி ஆண்டில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் உள்ள முக்கிய கோவில்களான மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, வேளச்சேரி தண்டீஸ்வரர், மண்ணடி காளிகாம்பாள், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர், வடபழனி ஆண்டவர் திருக்கோவில், போரூர் இராமநாதீஸ்வரர், கோடம்பாக்கம் பாரத்வாஜீஸ்வரர், மேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாதர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், முகப்பேர் சந்தானசீனிவாசபெருமாள், திருமுல்லைவாயில் முல்லைவனநாதர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், அண்ணாநகர் சந்திரமௌலீஸ்வரர், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களின் அந்தந்த பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்த அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வருண பூஜைகள்
* பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம்.
* நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு.
* ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை (மழை வேண்டும் பதிகம்) ஓதுதல்.
* திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல்.
* சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா.
* சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேகம்.
* மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
* ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம்.
* வருண சூக்த வேத மந்திர பாராயணம்.
* வருண காயத்ரி மந்திர பாராயணம்.
எந்தந்த ராகங்களை இசைக்கலாம்
நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை உள்ளிட்ட வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்தால் மழை கொட்டும் என்பது ஐதீகம்.
கூட்டு பிரார்த்தனை
ஆலயங்களில் நடைபெறும் வருண ஜபம் மற்றும் பூஜையின் போது பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.