ஒடிசாவில் பானி புயலில் சிக்கி இதுவரை 1௦ பேர் பலியாகி உள்ளனர்.

வங்க கடலில் உருவான பானி புயல் நேற்று காலை 8 மணிக்கு ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கியதில்  தலைநகர் புவனேஸ்வரம், கோவில் நகரம் பூரி ஆகியவற்றில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள் நொறுங்கி உள்ளன. 14 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்து இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து சிதறின. மொட்டை மாடிகளில் அமைக்கப்பட்டு இருந்த தொலைத் தொடர்பு கோபுரங்கள் விழுந்ததால் செல்போன் சேவை முடங்கி உள்ளது.

புயல் கரையை கடந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் பூரி, புவனேஸ்வரம் நகரங்களில் 90 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பூரியில் 90 சதவீத தெருக்களில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. அந்த மரங்களை போர்கால அடிப்படையில் அகற்றி வருகிறார்கள். நேற்று இரவு மின்சாரமும், தொலை தொடர்பு சேவையும் இல்லை.

பானி புயல் காரணமாக, இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். ராஜ்நகரில் 2 பேர், பூரியில் 2 பேர், மயூர்பஞ்ச் 2 பேர், ஜாஜ்பூர் 2 பேர், நயாகாட் மற்றும் ஜலேஷ்வர் பகுதியில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர்.