ஒடிசா மீட்பு பணியில் முப்படைகளும் தீவிரம்

இந்தியா

கொல்கத்தா, மே 4: புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் மீட்பு பணி தீவிரமடைந்துள்ளது. முப்படையினரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  புயல் காரணமாக ஒடிசாவில் நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவை தாக்கிய புயல் பலவீனமடைந்து மேற்கு வங்கத்திற்குள் நுழைந்திருப்பதால் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே ஒரிசாவில் புயல் தாக்கிய இடங்களில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பானிபுயல் நேற்று காலை ஒரிசாவில் பூரிநகர் அருகே கரையை கடந்த பிறகு பலவீனமடைந்து வங்கதேசம் நோக்கி சென்றது.

இதன் விளைவாக மேற்கு வங்காளத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.  ஒடிசாவில் புவனேஸ்வரம், பூரி மற்றும் கடலோர பகுதிகளில் லட்சக்கணக்கான மின்சார கம்பங்கள் சாய்ந்து விட்டன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.

புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை காற்றில் பறந்து சேதமடைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் முன்கூட்டியே அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் முப்படையினர் முன்கூட்டியே சுமார் 12 லட்சம் பேரை அப்புறப்படுத்தியதால் பானி புயலால் உயிரிழந்தவர்கள் 8 பேர் மட்டுமே. 1999-ல் சூப்பர் புயல் ஒடிசாவை தாக்கிய போது 10,000 பேர் உயிரிழந்தனர்.

அந்தவகையில் இப்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்ல பலன் தந்துள்ளது.இன்று காலை முதல் மீட்பு பணியில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்கம்பங்களை அகற்றுதல், சரிந்து கிடக்கும் மரங்களை அகற்றுதல் போன்றவற்றில் முப்படையினர் மட்டுமின்றி பொது மக்களும் ஈடுபட்டுவருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் பிரதமர் பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பையொட்டி ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.