சென்னை, மே 4:  வங்க கடலில் சென்னை மற்றும் ஐதராபாத் அருகே ஆழ்கடலில் மிதவைகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்ததால்தான் பானி புயலின் திசையை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் பூரி நகரத்தை தாக்கிய பானி புயலால் 190 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை சுமார் 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு 10-க்கும் குறைவாகவே இருந்தது.  பானி புயல் உருவாகப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்தும் இந்த புயல் எந்த திசையில் பயணிக்கும் என்பதை துல்லியமாக கணித்தும் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டது.

நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்திய தேசிய கடல் தகவல் மையத்தின் சார்பில் ஐதராபாத் கடல் பகுதியில் 7 நவீன மிதவைகளும், இலங்கை கடலோரத்தையொட்டி சென்னையில் இருந்து 425 கி.மீ தொலைவில் ஒரு மிதவையும் மற்றும் வங்க கடலோரத்தில் கிழக்கு பகுதிகளில் 7 மிதவை கருவிகளும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தன.

புயல் சின்னத்துடன் இந்த மிதவைகள் நேரடி தொடர்பில் ஈடுபட்டு அதன் பயண திசையை சரியான முறையில்தந்து கொண்டே இருந்தது. இதன் விளைவாகவே காற்று வீசும் வேகம் புயல் செல்லும் திசை ஆகியவற்றை துல்லியமாக கணிக்க முடிந்தது என கடல் தகவல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த மையத்தின் தலைவர் ஆர்.வெங்கடேசன் மேலும் கூறுகையில், ஆழ்கடலில் நிறுத்தப்படும் இந்த மிதவைகள் கடலில் வெப்பம், சுற்றுப்புற வெப்பம், அலைகளின் வேகம், உயரம் ஆகியவற்றை கணக்கிட்டு தகவல் தெரிவிக்கும்.

இப்போது பானி புயல் பற்றிய தகவலை தெரிவிப்பதில், (பைஸ்) என்ற மிதவை நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறது என்றார். மேலும் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த கருவிகள் மூலம் கிடைக்கும் தகவலை இந்திய கடலோர காவல் படை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை நல்ல முறையில் ஆய்வு செய்து செயல்பட்டதாக கடல் அறிவியல் மற்றும் தகவல் சேவை மையத்தின் தலைவர் பாலகிருஷ்ண நாயர் கூறியுள்ளார்.