என் கேரியரில் முக்கிய படம் 100: அதர்வா

சினிமா

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 100. இதில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ளனர். முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

வரும் 9-ந் தேதி வெளியாகும் இந்த படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், இயக்குனர் சாம் ஆண்டன், தயாரிப்பாளர் மகேஷ், நாயகன் அத்வா, ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அதர்வா பேசியதாவது, தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் படங்கள் வருகின்றன, அதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம்.

சாம் ஆண்டன் ஆக்ஷன் படங்களை மிகச்சிறப்பாக எடுக்கிறார். அவர் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை இயக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். சமூகத்தில் சமகாலத்தில் நடக்கும் விஷயங்களை இந்த படம் பேசும். நிச்சயம் இது என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.