வாய்ப்பை நழுவ விட்டது ஐதராபாத் : பெங்களூரு அபார வெற்றி….

TOP-1 விளையாட்டு

விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சகாவும், கப்திலும் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். 5-வது ஓவரை எதிர்க்கொண்ட சகா 20 ரன்னிலும்,  8-வது ஓவரை எதிர்க்கொண்ட கப்தில் 30 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
அடுத்து வந்த மணிஷ் பாண்டே 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களம் வந்த கேன் வில்லியம்சனும், விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்து ஆடினர். 14-வது ஓவரில் விஜய் சங்கர் 27 ரன் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த பதான் (3) முகமது நபி (4) ரன் எடுத்து நடையை கட்டினர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன் எடுத்தது.  கேன் வில்லியம்சன் 70 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
பெங்களூரு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டும், சாஹல், கெஜ்ரோலியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. தொடக்க வீரர்களான பார்தீவ் பட்டேல் (0) விராட் கோலியும் 16 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்த வந்த ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து வந்த ஹெட்மெயரும், குர்கீரத் சிங் மானும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடித்தனர். ஹெட்மெயர் 75 ரன்னும், குர்கீரத் சிங் மான் 65 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது.