சேலம்,மே 5:திமுக தலைவர் ஸ்டாலின், தோல்வி பயத்தின் காரணமாகவே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரயிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தினகரனுக்கும், ஸ்டாலினுக்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாயிருப்பதாகவும் எடப்பாடி தெரிவித்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.ஏற்கனவே இந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக எம்எல்ஏ மரணம் அடைந்ததின் காரணமாக இடைத்தேர்தல் வந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது. மாநில அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் தொடங்கப்பட்ட நிலையில் திமுக நீதிமன்றத்திற்கு
சென்றதால் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை . உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் அதிமுக எதிர்கொள்ளும் .

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். டெல்லி மாணவர்களின் வேலைவாய்ப்பை தமிழக மாணவர்கள் தட்டிப் பறித்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளது அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.

தமிழக மாணவர்களை பொறுத்தவரை அவர்களின் தனிப்பட்ட திறமைகள் காரணமாகவே வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் என்றும் மாநில அரசு இதில் தலையிட வில்லை . அதிமுக அரசு உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டதால் தமிழக மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் தோல்வி பயம் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சார உத்திகளை மாற்றி மக்களை சந்தித்து பேசி வருகிறார். வழக்கமாக திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் இறங்கி போகாதவர்.

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்த நிலையில் இது குறித்து ஸ்டாலின் ஏன் கொதிக்கவேண்டும்? திமுகவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இதன்மூலம் திமுகவிற்கும் அமமுகவிற்கும் உள்ள ரகசிய தொடர்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆனால் தேவை இல்லாமல் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஸ்டாலின்
சொல்லியிருக்கிறார் .

ஏற்கனவே ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதித்திட்டம் தீட்டினார் தற்போது கட்சியை உடைக்க சதி செய்கிறார். 22 தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று கூறும் ஸ்டாலின் அதில் நம்பிக்கை இல்லாததால் தோல்வி பயம் காரணமாகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருகிறார்,

மேட்டூர் அணை திறப்பு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இயற்கை ஒத்துழைத்தால் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.