மார்ட்டின் உதவியாளரை தாக்கவில்லை: ஐ.டி. பதில்

சென்னை

கோவை, மே 5:மர்மமான முறையில் மார்ட்டின் உதவியாளர் மரணமடைந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உதவியாளர் பழனிசாமியை நாங்கள் தாக்கவில்லை என்றும், அவரிடம் நடத்திய விசாரணை சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக கூறியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த சில நாள்களாக சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின்போது மார்ட்டின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பழனியிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள நீர்நிலையில், பழனியின் உடல் சடலமாகக் கண்டறியப்பட்டது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.

இதுகுறித்து, வருமான வரித் துறையினர் கூறுகையில், கணக்கில் வராத ரூ.595 கோடி லாட்டரி முகவர்களிடம் இருந்து திரட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்தத் தொகைக்கான கணக்கு காட்டப்படவில்லை. மேலும், ரூ.619 கோடி அளவுக்கு கணக்கில் வராத வகையில் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. ரூ.24.57 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் கணக்கில் காட்டப்படவில்லை. அதே போல், சோதனையின்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றனர்.

இதனிடையே, மார்ட்டினுக்குச் சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்த பழனி என்பவரிடமும் விசாரணை நடந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதில் மர்மம் இருப்பதாக அவரது மகன் ரோகின் குமார் காரமடை போலீசில் புகார் செய்தார்.

அவர் அளித்துள்ள புகாரில் தனது தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை வருமான வரித்துறை மறுத்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார்தாரர் எந்த அதிகாரியையும் குறிப்பிட்டு புகார் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் பழனி சாமியை நாங்கள் உடல்ரீதியாக சித்ரவதை செய்யவில்லை. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அனைத் தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 15 கேள்விகளுக்கு மட்டும் அவர் பதில் அளித்தார் என்றார்.

பழனிசாமி உடலில் காயம் இருந்தது பற்றி கேட்டதற்கு அவர் கீழே விழுந்ததில் தனக்கு தானே காயத்தை ஏற்படுத்தி இருப்பார். எல்லாமே ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.