சென்னை, மே 5:உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைத்து வருவதன் காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதி கிடைக்காமல் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைப்படடு உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளமே நொறுங்கி விழும் நிலையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை கடுமையாக உள்ளது, மேலும் கழிவுநீர் அகற்றல், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. உடனடியாக தமிழக அரசு வாக்காளர் பட்டியலை இறுதி செய்து குறித்த காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென தமிழக அரசை சிபிஎம் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அதிமுக அரசின் இப்போக்கினை கண்டித்தும் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வற்புறுத்தியும் அனைவரும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டுமென சிபிஎம் மாநில செயற்குழு வேண்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.