போபால், மே 5:எதிர்க்கட்சிகளின் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வருமானால், நாளுக்கொருவர் பிரதமராக இருப்பார்கள் என்று பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கர் பகுதியில் நடைபெற்ற பிஜேபி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் யார் என தொடர்ந்து நான் எழுப்பி வரும் கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்குமானால், திங்கள்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார். செவ்வாய்க்கிழமை அகிலேஷும், புதன்கிழமை சரத் பவாரும், வியாழக்கிழமை தேவகவுடாவும், வெள்ளிக்கிழமை சந்திரபாபு நாயுடுவும், சனிக்கிழமை மம்தாவும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை பிரதமர் பதவிக்கு விடுமுறை கொடுத்துவிடுவார்கள்.

நமது நாட்டுக்கு வலுவான தலைவரும், மத்தியில் வலுவான ஆட்சியும் அவசியம். முந்தைய காங்கிரஸ் அரசு, ஏழை மக்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. பயங்கரவாதத்தை ஒடுக்கவோ, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தரவோ காங்கிரசால் முடியாது. பிரதமர் மோடியால் மட்டுமே பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை தர முடியும் என்றார்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்ற தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லாவின் கருத்தைக் குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியும் அதையே விரும்புவதாகக் கூறினார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு, பிஜேபி அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
எனவே, நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டுமெனில், மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். இதனை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அமித் ஷா பேசினார்.