சென்னை, மே 5:திருவொற்றியூரில் கடலில் குளிக்கச்சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கினர். ஒருவர் சடலம் இன்று காலை கரையில் ஒதுங்கிய நிலையில் மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (வயது 13). அங்குள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.இதே பகுதியைச் சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மதன் (வயது 14). இவர் அதே பள்ளியில் 7-வது வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று பகல் மாணவர்கள் இருவரும் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் அருகே கடலில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது வந்த ராட்சத அலை ஒன்று மாணவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் மாணவர்கள் வீட்டிற்கு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் மாணவர் களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திருவொற்றியூர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு திருச்சினாங்குப்பம் கடற்கரை யில் மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது அது சஞ்சய் (வயது 13) என தெரியவந்தது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மற்றொரு மாணவரின் கதி என்ன? அவரும் கடல் அலையில் சிக்கி காணாமல் போனாரா என்ற கோணத் தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலோர காவல் படையினர்,
போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் காணாமல் போன மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.