பாம்பின் சாகசங்கள் நிறைந்த நீயா-2: இயக்குனர்

சினிமா

ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள ரொமான்டிக் த்ரில்லர் படம் ‘நீயா2’. இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்கி உள்ளார். ஷபீர் இசையமைத்துள்ளார். ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ள இப்படம் வரும் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படம் பற்றி இயக்குனர் எல்.சுரேஷ் கூறியதாவது:-

படத்தில் நடிக்க பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம் ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், நீயா படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

அதேபோல், நீயா படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. பெயர், பாம்பு மற்றும் ஒரே ஜீவன் பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது.பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறோம். எங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனர் வெங்கடேஷ் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.