கொல்கத்தா, மே 6: மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த பிஜேபி வேட்பாளர் அர்ஜுன் சிங்கை, திரிணமுல் காங்கிரசார் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பராக்பூர் தொகுதியில் இன்று காலை வழக்கம் போல் துவங்கியது. காலை முதலே அதிக அளவிலான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க வந்தனர்.

இந்நிலையில், பிஜேபி சார்பில் போட்டியிடும் அர்ஜுன் சிங் வாக்குச் சாவடிக்கு வந்த போது, அங்கிருந்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், அர்ஜுன் சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் இரு கட்சி தொண்டர்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது. காவலில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர்.